பதிவு செய்த நாள்
08
மார்
2022
03:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (8 ம் தேதி) துவங்கியது. மார்ச் 21ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
கோயிலில் இன்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பங்குனி திருவிழாவிற்கான கொடியேறினர். கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் சங்கர் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. திருவிழா நடைபெறும் மார்ச் 23 வரை காலையில் தங்க சப்பரம், தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அருள்பாலிப்பர்.
திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 14 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சியும், மார்ச் 15 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 16 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, நடராஜர் சிவகாமி அம்பாள் புறப்பாடு. மார்ச் 17 பச்சைக்குதிரை ஓட்டம், மார்ச் 18 பங்குனி உத்திரம், மார்ச் 19 சூரசம்ஹார லீலை, மார்ச் 20 பட்டாபிஷேகம், மார்ச் 21 திருக்கல்யாணம், மார்ச் 22 தேரோட்டம், மார்ச் 23 தீர்த்த உற்சவம் நடக்கிறது. முன்னதாக இன்று காலை யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு கொரோனா தடை உத்தரவு தளர்வுகளால் இன்று கார்த்திகையை முன்னிட்டு தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடாகினர்.