கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 12:03
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிராது கட்டி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு பங்குனி உத்திர பெருவிழா நேற்று காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கொடிமர சிறப்பு பூஜைகள் செய்து, கோவில் குருக்கள்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் விமர்சையாக நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சங்கர், ஊராட்சி தலைவர் தியாகநீதிராஜன், திமுக ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி உட்பட உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக வரும் 17ம் தேதி தேரோட்டம், 18ம் தேதி பங்குனி உத்திரத்தன்று அதிகாலை கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று மணிமுக்தாற்றில் இருந்து கரகம் காவடி பால்குடம் சுமந்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அன்று மாலை மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது.