திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து: இன்று முதல் புதிய நடைமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 01:03
திருநெல்வேலி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூபாய் 250 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் ரூபாய் 20 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இன்று முதல் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதுகுறித்து கோயில் இணை ஆணையர் குமரதுரை கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ரூபாய் 250 கட்டண சிறப்பு தரிசனம், 100 ரூபாய் கட்டண வரிசை, ரூ 20 கட்டண வரிசை, கட்டணமில்லாத பொது தரிசனம் ஆகிய 4 வரிசைகள் இருந்தன. பாகுபாட்டை தவிர்ப்பதற்காக ரூ 250 கட்டணம், ரூ 20 கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது. இன்று 9ம் தேதி முதல் ரூ 100 கட்டணம், மற்றும் கட்டணமில்லா பொதுதரிசனம் ஆகிய இரு வழிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோயில் மகாமண்டபத்திற்கு பிறகு இருவழி பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களை திரிசுதந்திரர்கள் அழைத்துச் செல்ல கூடாது என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.விஐபி தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இன்று முதல் 15 நாட்கள் இந்த புதிய முறைகள் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வருகிறது. கோயில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதற்கட்டமாக இன்று 60 பேர் ஈடுபடவுள்ளனர் என்றார். பேட்டியின்போது இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோயில் உதவி ஆணையர் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளர்கள் கணேசலிங்கம், சொர்ணம், மக்கள் தொடர்பு அதிகாரி மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.