பதிவு செய்த நாள்
22
மார்
2022
03:03
மயிலாடுதுறை: கீழப்பெரும்பள்ளம் கோவிலில் கேது பெயர்ச்சி விழா நேற்று மதியம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கேது பகவானை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இத்தலத்தில் கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சாயா கிரகம் என்று அழைக்கப்படும் கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி பெயர்ச்சி அடையக் கூடியவர். கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றதை முன்னிட்டு முன்னிட்டு இக்கோவிலில் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்த பின் கேது பகவானுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சரியாக 03:14 மணிக்கு பெயர்ச்சி அடைந்ததை ஒட்டி கேது பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை கோவில் அர்ச்சகர்களான மணி பட்டு, கார்த்திகேயன், கல்யாணம் மற்றும் சண்முகம் ஆகியோர் செய்துவைத்தனர். பெயர்ச்சி விழாவில் பரிகார ராசிகளான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை உடைய திரளான பக்தர்கள் கேது பகவானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன் செய்திருந்தார். பூம்புகார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.