பதிவு செய்த நாள்
22
மார்
2022
07:03
காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சுப்பிரமணியசுவாமி தோன்றி, குறிப்பிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து, நுாற்றாண்டு காலமாக பூஜை செய்யப்பட்டு வருகிறது. பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதுமில்லை. அடுத்த பொருள் வரும் வரை இடம் பெறும்.
அதேசமயம் பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில், நேர்மறை அல்லது எதிர்மறையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் திருப்பூர், நாச்சிபாளையத்தை சேர்ந்த பானுமதி, 40, என்பவரின் கனவில் உத்தரவான இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள், நேற்று முதல் பெட்டியில் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன் கடந்த, 3ம் தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் பொருட்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.