பதிவு செய்த நாள்
23
மார்
2022
07:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடந்த குண்டம் இறங்கும் திருவிழாவில், 80 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவை காண, லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.தமிழகம் மற்றும் கர்நாடகா அளவில் பிரசித்தி பெற்ற, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், குண்டம் விழா வெகு விமரிசையாக நடக்கும்.
சப்பரத்தில் திருவீதியுலா: கொரோனா பரவலால் 2020, 2021ல் தீ மிதி விழா ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு தொற்று பரவல் குறைந்த நிலையில், விழாவுக்கு அனுமதி தரப்பட்டது. கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா துவங்கியது. கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில், பண்ணாரி அம்மன் சப்பரத்தில் திருவீதியுலா சென்றது. கோவிலில் நாள்தோறும் சிறப்பு பூஜை, மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடந்தன.முக்கிய நிகழ்வான குண்டம் விழா, நேற்று அதிகாலை துவங்கியது. முன் னதாக பண்ணாரி அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 2:45 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று, அங்குள்ள சருகு மாரியம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க, மேள தாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.குண்டத்தில் பூஜை செய்து, மலர்களை துாவி, அதிகாலை 3:55 மணிக்கு பூசாரி செந்தில்குமார் முதலில் குண்டம் இறங்கி துவங்கி வைத்தார். இதையடுத்து, பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். கல்லுாரி மாணவ - மாணவியர், திருநங்கையர், பெண்கள், காவலர், வனத்துறையினர் என பாகுபாடின்றி, அம்மா தாயே... பண்ணாரி அம்மா என கோஷமிட்டபடி குண்டம் இறங்கினர்.
ஊர்காவல் படையினர்: மாலை வரை பக்தர்கள் தீ மிதித்தபடி இருந்தனர். மொத்தம் 80 ஆயிரம் பேர் தீ மிதித்ததாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.குண்டம் இறங்கிய பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று, அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.ஈரோடு எஸ்.பி., சசி மோகன் தலைமையில் ஈரோடு, கோவை, நாமக்கல், நீலகிரி மாவட்ட போலீசார், போக்குவரத்து போலீசார், ஊர்காவல் படையினர் என, 2,060 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீ மிதித்த வி.ஐ.பி.,க்கள்!: பண்ணாரி அம்மன் கோவிலில், எப்போதும் முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்குவது வழக்கம். நேற்று நடந்த குண்டம் விழாவில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி முதன்மை செயலரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான அமுதா, பண்ணாரி மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், இசை கலைஞர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.