பதிவு செய்த நாள்
23
மார்
2022
10:03
மண்ணடி: மண்ணடி, காளிகாம்பாள் கோவிலில் 2.5 கோடி ரூபாய் செலவில், 11 அடி உயரம் 6 அடி அகலம் உடைய புதிய வெள்ளித்தேர் செய்யும் பணியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். சென்னை, மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவில் மற்றும் காளிகாம்பாள் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் ஆகியோர் பங்குனி உத்திர விழாவில் பால்குடத்தை நேற்று துவங்கி வைத்தனர். மண்ணடி, காளிகாம்பாள் கோவிலில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வெள்ளி திருத்தேர் பணியை துவங்கி வைத்தனர்.பின், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியதாவது:கொேரானா அச்சத்திலிருந்து விடுபட்டு, தமிழகம் முழுதும் ஏராளமான கோவில்களில் திருவிழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், குடமுழுக்கு விழாக்களும் நடந்து வருகிறது.மேலும் கோவில் நிலங்கள் மீட்பு பணி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் என, ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பான பணிகளை செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் கூறியதாவது:கோவில்களில் உள்ள ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் படியெடுத்து ஒலி வருடல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.தல புராணம், தல வரலாறு ஆவணப்படுத்துதல், புத்தகங்களாக வெளியிடுதல் போன்ற பணிகளுக்கு ஆலோசனை வழங்குபவராக, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளது சிறப்பு. நீண்ட காலமாக ஆகமங்கள் மொழி பெயர்க்கப்படாமல் உள்ளது. ஆகம விதிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவும் சுகிசிவம், சக்திவேல் முருகனார் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:காளிகாம்பாள் கோவிலில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி துவங்கி வைக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் கோவில் விவகாரத்தில், இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.