பதிவு செய்த நாள்
23
மார்
2022
03:03
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேகம் பூர்த்தி விமர்சையாக நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, நுாற்றுக்கால் மண்டபத்தில், நேற்று மாலை 6:00 மணியளவில், முதல்கால யாகபூஜை நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு புனிதநீர் கலசங்கள், 1008 சங்குகள் வைத்து சிறப்பு வேள்வி பூஜை துவங்கியது.
இன்று காலை 7:00 மணியளவில், இரண்டாம் கால யாகபூஜை, மகா தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் இணைந்து, காலை 10:45 மணிக்கு கடம்புறப்பாடு நிகழ்வுடன் ஆழத்து விநாயகருக்கு மகா அபிேஷகம் செய்து, மண்டலாபிஷேக பூர்த்தி செய்தனர். தொடர்ந்து, சுவாமி, சண்முக சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, விருத்தகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் செயல் அலுவலர் மாலா, கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர்சந்த் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.