பதிவு செய்த நாள்
23
மார்
2022
04:03
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதியளித்தும், ஆயத்தப்பணியில் தொய்வு தென்படுவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை கொண்டது.கடந்த 1980ல், சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பின், 1991, 2008ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி.ஆனால், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்து வருவதாகவும், கோபுரங்கள் பொலிவிழந்து காணப்படுவதாகவும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். கடந்தாண்டு, கோவிலில் ஆய்வு செய்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கூறி சென்றார். அதன் தொடர்ச்சியாக, துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து கோவிலை பார்வையிட்டனர். இருப்பினும், பணிகள் வேகமெடுக்கவில்லை என்கின்றனர் பக்தர்கள்.கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறுகையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணி துவங்கும், என்றார்.