கூடலூர்: தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா தொடர்பாக நாளை(மார்ச் 24) உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக-கேரள எல்லையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறும். தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், கோவிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பு இரு மாநில கலெக்டர் அளவிலான ஆலோசனை கூட்டம் நடத்தி அதனடிப்படையில் விழா நடத்தப்படும். இந்த ஆண்டு ஏப். 16 ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக இரு மாநில கலெக்டரின் ஆலோசனைக்கூட்டம் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்கு முன்னதாக விழா முன்னேற்பாடுகள், கட்டுப்பாடுகள் குறித்து நாளை ஆர்.டி.ஓ., கவுசல்யா தலைமையில் உத்தமபாளையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினரும் கலந்து கொள்கின்றனர்.