ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வீடியோ எடுத்த பக்தரின் மொபைல் போனை கோயில் ஊழியர்கள் பறித்து உண்டியலில் போட்டனர்.
ராமேஸ்வரம் கோயிலில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக 2013 முதல் கோயிலுக்குள் மொபைல்போன் எடுத்து செல்ல தடை விதித்தனர். இந்நிலையில் மத்தியபிரதேசம் உஜ்ஜயினி சேர்ந்த லலித்குமார் கத்திரி, தனது உறவினர்களுடன் கோயிலுக்குள் தரிசனம் செய்து வந்தார். அப்போது போலீசாருக்கு தெரியாமல் மொபைல் போனை எடுத்து வந்து, சுவாமி சன்னதியில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட கோயில் ஊழியர்கள் மொபைல் போனை பறித்து சுவாமி சன்னதி முன்புள்ள உண்டியலில் போட்டனர். இதனால் ஆவேசமடைந்த பத்தர் கூச்சலிட்டு உள்ளார். போலீசாரின் அலட்சியத்தால் பத்தர் மொபைல் போனை எடுத்து வந்த செயல் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க கோயில் அதிகாரிக்கு, ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.