ஏப்.1 முதல் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2022 10:03
திருப்பதி: திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் ஏப்.1ம் தேதி முதல் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏப்.1 முதல் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்கொரோனா பரவல் காரணமாக திருமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்ஜித சேவையில் வரும் ஏப்ரல் 1 முதல் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாக கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.இந்நிலையில் திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் வரும் ஏப்.1ம் தேதி முதல் குலுக்கல் முறையில் நேரடியாக வழங்கப்படும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளையும் தேவஸ்தானம் தொடங்க உள்ளது. இதற்காக பக்தர்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அலைபேசியில் தகவல் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அங்கபிரதட்சணம்: தேவஸ்தானம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அங்கபிரதட்சணத்திற்கான டிக்கெட்டுகளை திருமலையில் உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபம் 1ல் வழங்க முடிவு செய்துள்ளது. அங்கபிரதட்சணம் செய்ய விரும்புபவர்கள் முன்தினம் திருமலைக்கு சென்று தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட்டுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அங்கபிரதட்சணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வியாழக்கிழமை டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது. இந்த டிக்கெட்டுகளும் ஏப்.1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.