முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடு திருத்தணி. ஒருவர் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அந்த திசையை நோக்கி நின்றால் போதும்; பாவங்கள் நீ்ங்கும். பழநியைச் சேர்ந்தவர் கல்லுக்கட்டி சுவாமிகள். இவருக்கு மைசூரு அரண்மனையைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவரிடம் நட்பு ஏற்பட்டது. ஒருநாள் சுவாமிகள் திருப்புகழ் பாடுவதைக் கேட்ட சமையல்காரருக்கு அதில் ஈடுபாடு வந்தது. முருகப்பெருமான் மீது பக்தி வரவே பழநிக்கு புறப்பட்டார். திருப்புகழ் பாடல்களைப் பாடி வழிபடத் தொடங்கினார். பின்னர் ரமணர், சேஷாத்திரி சுவாமிகளை சந்திக்க திருவண்ணாமலைக்கு சென்றார். ‘வள்ளிமலைக்கு (சென்னை – பெங்களூரு சாலையில் திருவல்லம் என்ற ஊரிலிருந்து 12 கி.மீ) சென்று திருப்புகழ் பரப்புக’ என அவர்கள் இருவரும் வழிகாட்டவே, அங்கு ஆஸ்ரமம் அமைத்தார் சமையல்காரர். திருப்புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு வள்ளிமலையில் தங்கியதால் இவரை ‘வள்ளிமலை சுவாமிகள்’ என அழைத்தனர். இவரைத் தரிசிக்க பக்தர்களின் கூட்டம் நாள்தோறும் பெருகியது. இந்நிலையில் ஒரு ஆங்கில புத்தாண்டன்று பக்தர்கள் கூட்டம் இவரை காண வரவில்லை. ஆங்கிலேய துரைகளை பழங்கள், பூமாலைகளுடன் ஆங்கில புத்தாண்டன்று சந்திக்கும் வழக்கம் முன்பு இருந்தது. அதனால்தான் சுவாமிகளைக் காண கூட்டம் அன்று குறைவாக இருந்தது. சாதாரண மனிதர்களை வணங்கச் செல்கிறார்களே என சுவாமிகள் வருத்தப்பட்டார். இதற்கு மாற்றாக ‘துரைகளுக்கு எல்லாம் பெரிய துரையான’ திருத்தணி முருகனை வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1918 ஜன.1 முதல் விழா ஒன்றை ஏற்படுத்தினார். ஒவ்வொரு டிச.31 அன்றும் மாலையில் தீபம் ஏற்றியதும், படிக்கு திருப்புகழில் இருந்து ஒரு பாடல் பாடி, 365 படிகளுக்கும் நைவேத்தியம் செய்யும் வழக்கத்தை உருவாக்கினார். அன்று ஆரம்பித்த ‘திருப்புகழ் படித்திருவிழா’ இன்றும் ‘முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் நடக்கிறது.