ஆரியங்காவு – மாம்பழத்துறையில் புஷ்கலாதேவி ஜோதி ரூப தரிசனம்
பதிவு செய்த நாள்
25
டிச 2025 10:12
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாம்பழத்துறையில் புஷ்கலாதேவி, ஜோதி ரூபமாக ஆவாஹனம் செய்து "மணமகள் அழைப்பு" சடங்கு நடந்தது. திருக்கல்யாணத்திற்கு அம்பாளை ஜோதி ரூபமாக ஆரியங்காவுக்கு அழைத்து வருவது இந்த ஐதீக நிகழ்வு. புஷ்கலையின் தந்தையை, மதம் பிடித்த யானையிடம் இருந்து பகவான் காத்த இடம் மாம்பழத்துறை. இதுதான் உன்மகள் இனி வாசம் செய்யப் போகும் தலம் என்று பகவான் சொல்லாமல் சொல்லி சுட்டிக் காட்டிய இடம். ஜோதி ரூபத்தில் தேவி மாம்பழத்துறைக்கு வந்த கோலத்திலேயே உறைந்த திருமேனியாக காட்சி தரும்புஷ்கலாதேவி, மணமகள் அலங்காரத்தில் 8 கைகளில் 8 ஆயுதங்களை ஏந்தி, சத்தியத்திற்கு கட்டுப்பட்டவராக சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி இருக்கிறார். திருக்கல்யாண வைபவத்திற்கு தங்கள் குல தேவியை ஆரியங்காவுக்கு அழைத்துச் செல்ல அனைத்து ஊர்களில் இருந்தும் இங்கு சவுராஷ்டிரா மக்கள் திரண்டு வந்திருந்தனர். முன்னதாக மாம்பழத்துறை மக்கள், சவுராஷ்டிரா மக்களை மணமகள் புஷ்கலா தேவி குடும்பத்தாராக ஏற்று, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். கருவறையில் சத்திய ஜோதியாக விளங்கும் அம்மனின் ஜோதி ரூப சைதன்யத்தை திருவிளக்கில் ஆவாஹனம் செய்து, ஜோதி ரூபத்தை, மேல்சாந்தி மது சர்மா, ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மஹாஜன சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். சங்கத்தின் சார்பில் மூத்தத் தலைவர் டி.கே.சுப்ரமணியன் ஜோதி ரூபத்தை ஏந்திவர, ஆரியங்காவுக்கு ஊர்வலமாக ஜோதியை அழைத்து வந்தனர். சாஸ்தாவுடன் ஐக்கியம் ஆரியங்காவு ஊர் எல்லையில் கோயில் அதிகாரிகள், அட்வைசரி கமிட்டி நிர்வாகஸ்தர்கள், ஊர் மக்கள் ஜோதியை வரவேற்றனர்.மாலை 6:45 மணிக்கு மங்கள குலவை முழங்க, சரண கோஷத்துடன் கருவறையில்ஐயனின்ஜோதியுடன் அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகினார். ஏற்பாடுகளை மாம்பழத்துறை கோவில் அட்வைசரி கமிட்டி நிர்வாகிகள், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச்செயலாளர் எஸ். ஜெ.ராஜன், உப தலைவர்கள் கே.ஆர்.ஹரிஹரன், எஸ்.கே.ரவிச்சந்திரன், செயலாளர்கள் எஸ்.ஜெ.கண்ணன், எஸ்.எஸ்.மோகன், பொருளாளர் டி.எஸ்.ஆனந்தம், நிர்வாகிகள் எஸ்.கே.சரவணன், கே.ஆர்.ஜெயக்குமார், கே.ஆர்.பிரதீப் செய்திருந்தனர். மாம்பழத்துறை புஷ்கலா தேவி சவுராஷ்டிரா சபை தலைவர் ஜெ.ஜெ.மோகன், செயலாளர் அமர்நாத் தலைமையில் அனைவருக்கும் ஐந்து வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டியன் முடிப்பு இன்று ( டிச.,25) இரவு 8:00 மணிக்கு ‘பாண்டியன் முடிப்பு’ எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கிறது திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் கே.ராஜூ, பகவான் பிரதிநிதியாகவும், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன் அம்பாள் பிரதிநிதியாக இருந்து வெற்றிலை, பாக்கு, சொர்ண புஷ்பம் மாற்றிக் கொள்ளும் நிச்சயதாம்பூலம் வைபவம் நடக்கிறது. பொதுச்செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் சடங்குகளை நடத்தி வைப்பார். டிச.26ல் திருக்கல்யாணம், டிச.27ல் மண்டலாபிஷேகம் நிறைவு பூஜையும் நடைபெறும்.
|