பதிவு செய்த நாள்
31
மார்
2022
11:03
மேட்டுப்பாளையம்: குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில், பிரசித்தி பெற்ற குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 22ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. 25ம் தேதி நடந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 27ம் தேதி கற்பக விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம், தீர்த்தக்குடம் ஆகியவற்றை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 29ம் தேதி அக்னிகுண்டம் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை,4:30 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, அம்மன் சுவாமி அழைத்து வரப்பட்டது. காலை, 8:00 மணிக்கு அம்மன் சுவாமி கோவிலை அடைந்ததை அடுத்து, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
தலைமைப் பூசாரி வெள்ளிங்கிரி குண்டத்தை வலம் வந்து, மல்லிகைப்பூச் செண்டை குண்டத்தில் வீசி, முதலில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து கோலக் கூடை எடுத்து வந்த பிரபாகரன், கரகங்கள் எடுத்து வந்த மகேஸ்வரன், கண்ணன் ஆகியோர் குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆண், பெண்கள் என, 500க்கும் மேற்பட்டவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். மதியம் மாவிளக்கு எடுத்தலும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் சென்னியப்பன், உதவித் தலைவர் மணி, செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் அய்யாசாமி மற்றும் அனைத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.