புராண சொற்பொழிவாளர்களில் புகழ்மிக்கவர் முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார். சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலைக் கட்டியவர் இவர். காஞ்சி மஹாபெரியவரிடம் பக்தி கொண்ட இவரது வாழ்வில் நடந்த சம்பவம் சுவாரஸ்யமானது. கோல்கட்டாவைச் சேர்ந்த பணக்கார சேட்ஜி ஒருவர் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார். வயிற்றில் துளையிட்டு டியூப் மூலம் உணவு செலுத்தப்பட்டது. மருத்துவம், மந்திர, தந்திர பூஜைகள் என எத்தனையோ முயற்சித்தும் பலனில்லை. ஆனாலும் சேட்ஜி நம்பிக்கை இழக்கவில்லை. எதற்கும் ஒருநாள் விடிவு காலம் பிறக்கும் என காத்திருந்தார். நாடெங்கும் சொற்பொழிவாற்றும் முக்கூர் சீனிவாச வரதாசாரியார், ஒருமுறை கோல்கட்டாவில் மகாபாரதம் பற்றி பேச சென்றார். இடையிடையே ஹிந்தியிலும் விளக்கம் அளிப்பார் என்பதால் வடநாட்டவர்களும் சொற்பொழிவை கேட்க வருவர். சேட்ஜியும் ஒருநாள் பங்கேற்றார். அப்போது காஞ்சி மஹாபெரியவரின் பெருமைகளை முக்கூர் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டதும் மஹாபெரியவரை நேரில் தரிசிக்க உதவும்படி சேட்ஜி வேண்டினார். பெரியவரிடம் அனுமதி பெற்ற பின்னரே அழைத்துச் செல்ல முடியும் என முக்கூர் வரதாச்சாரியார் தெரிவித்தார். ஊர் திரும்பியதும் சென்னை நுாம்பல் என்னும் இடத்தில் முகாமிட்டிருந்த மஹாபெரியவரைச் சந்தித்தார். சேட்ஜியின் அவல நிலையைச் சொல்லி அவர் தரிசிக்க விரும்புவதை தெரிவித்தார். ஆனால் பெரியவர் பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மீ்ண்டும் ஞாபகப்படுத்திய போது, ‘இப்போது வேண்டாம்’ என மறுத்தார். ஏமாற்றம் அடைந்த முக்கூர் நடந்ததை சேட்ஜியிடம் சொல்லாமல் மழுப்பினார். ஆனால் பிடிவாதம் செய்த சேட்ஜி சென்னைக்கே புறப்பட்டு வந்தார். இருவரும் மஹாபெரியவரை தரிசிக்க வந்தனர். ‘கோல்கட்டாவை சேர்ந்தவர் இவர் தானா? நான் தான் வர வேண்டாம் என்றேனே’’ என்றார் மஹாபெரியவர். ‘இவரை இங்கு அழைத்து வந்தது தவறுதான். மிக நல்லவரான இவர் படும்பாட்டைக் காணச் சகிக்கவில்லை தங்களிடம் தீர்வு கிடைக்கும் என நம்பி வந்திருக்கிறார். தாங்கள் தான் அருள் கூர்ந்து வழிகாட்ட வேண்டும்’’ என்றார் முக்கூர். ஓரிரு நிமிடம் அமைதியாக இருந்த காஞ்சி மகான், ‘‘ நான் சொல்வதைச் செய்வாரா இவர்... அதற்கு நிறைய பணம் செலவாகுமே’’ என்று கேட்க ‘‘நிச்சயம் செய்வார். நோய்தீர தன் பணம் முழுவதையும் செலவிடத் தயாராக இருக்கிறார்’’ என்றார் முக்கூர். ‘‘வியாசர் எழுதிய புராணங்கள் பதினெட்டையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு கொடுக்கச் சொல்’’ என்றார். சேட்ஜியும் அதன்படியே புராணங்களை அச்சிட்டு அதில் ‘விலை’ என்னும் இடத்தில் ‘பக்தி’ என அச்சிட்டு வழங்கினார். 18வது புராணமான ஸ்காந்த புராணத்தை வெளியிடும் போது நோய் தீர்ந்தது. வாய் வழியாக அவர் சாப்பிடத் தொடங்கினார். புராண, இதிகாசங்களின் பெருமையையும், மஹாபெரியவரின் மகிமையையும் உணர்ந்த சேட்ஜியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.