பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
10:04
தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. நபிகள் நாயகம் மதினாவில் இருந்த காலத்தில், முஸ்லிம் ஒருவருக்கும், யூதர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முஸ்லிம் அன்பர், எங்கள் நபிகள் நாயகத்திற்கு தான் இறைவன் அதிகமான மேன்மை அளித்துள்ளான், என்றார்.யூதரோ, இல்லை... இல்லை.. இறைத்துõதர் மோசஸ் என்ற மூஸா (அலை) அவர்களே இறைவனின் மேன்மையைப் பெற்றவர், என வாதிட்டார். இதைக் கேட்ட முஸ்லிம் அன்பருக்கு கோபம் வந்து விட, அவர் உணர்ச்சிவசப்பட்டு யூத நண்பரை அடித்து விட்டார். இந்தத் தகவல் அண்ணல் நபிகளாருக்கு தெரிய வந்தது. இருவரையும் அவர் வரவழைத்தார். யூத நண்பரின் முன்னிலையில், அந்த முஸ்லிம் அன்பரை கண்டித்தார். அன்பரே! என் சகோதரர் மூஸா (அலை) அவர்களை விட, என்னை உயர்த்தி பேசாதீர்கள், என்றார். இதுகேட்ட யூத நண்பர் மனம் நெகிழ்ந்தார். நாயகத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வை நீக்கிக் கொண்டார். நபிகள் நாயகம் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது, நான் இறைவனின் அடிமை, பள்ளி சென்று படித்ததில்லை, நான் ஒரு அனாதை என்று சொல்வார். படிக்கவில்லை என்பதற்காக அவர் வெட்கப்பட்டதில்லை. தன்னைத் தாழ்த்திக் கொள்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.