திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2022 02:04
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலின் சித்திரைதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளினார். அதனையடுத்து கொடி மரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் மங்கள வாத்தியங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சித்திரை திருவிழா பஞ்சமுக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை கணேஷ் சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்துவைத்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 11ம் தேதி சகோபர வீதி உலாவும், 12- ஆம் தேதி இரவு எமன் சம்காரமும், 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் திருவிழாவும், 16ஆம் தேதி தீர்த்தவாரியும், 18ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கேஷியர் ஸ்ரீராம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.