மயிலாடுதுறை: சீர்காழி அருகே சொர்ணபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் சூரிய பூஜை வழிபாடு மூலவர் சிவபெருமான் தனது முழுமையாக ஆட்கொண்ட சூரிய ஒளியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் சொர்ணபுரம் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் விநாயகர், முருகப்பெருமான்,பைரவர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். முன்பு ஒரு காலத்தில் சமயக்குறவர்கள் நால்வருள் ஒருவரான சுந்தரரிடம் திருவிளையாடல் புரிந்த சிவபெருமான், சுந்தரர் தரிசிக்க வந்த போது மறைந்துக் கொண்டதாகவும், அப்போது சொர்ணாம்பிகை அம்மன் பொற்காசுகள் வழங்கி காட்சி கொடுத்த வரலாற்று சிறப்பு பெற்ற தலமாகும். இக்கோவிலில் மூலவர் சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் தரித்திரநிலை நீங்கி,அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதும் வருமானத்திற்கு தடை இல்லாமல் கிடைக்கும் என்பது கோயில் வரலாறு. இந்த கோவிலில் இன்று காலை சிவ சூரிய பூஜை வழிபாடானது நடந்தது. காலை சூரிய பகவான் ஈசனை முழுவதும் ஆட்கொண்ட திருக்காட்சி வைபவம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் பகவானின் அருளையும் சூரிய பகவானின் அருளையும் பெற்றனர். இக்காட்சி நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் மற்றும் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மீண்டும் தெரியும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தர்கள் சிவ சூரிய வழிபாட்டு திருவிழாவில் கலந்து கொண்டு இறைவனனின் பரிபூரண அருளைப் பெற கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சூரிய வழிபாட்டினை கண்டால் சூரிய கிரக தோஷம் நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம் . வருடத்தில் பங்குனி மாதத்தில் மூன்று முறை மட்டுமே சூரியன் ,ஈசனை இவ்வாலயத்தில் வழிபடும் காட்சி வைபவம் நடைபெறும்.