பதிவு செய்த நாள்
09
ஏப்
2022
11:04
கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமதூதன் அனுமானை பிரம்மச்சாரியாக பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் அவரைத் திருமணமானவராக கூறுகிறார்கள். அந்நாட்டை ஆண்ட நான்காம் ராமன் ராமகியான்என்ற பெயரில் ராமாயணம் எழுதியுள்ளார். அதில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் புதுமையாக இருக்கிறது.சிவலோகத்தில் வாழ்ந்த புஸ்மலி என்பவள், ஒரு சாபத்தால் லவா என்ற நாடாண்ட மன்னன் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சுவர்ணமாலி என்ற தங்கை இருந்தாள். பெண்ணாசை கொண்ட ராவணன் அவர்களைக் கடத்தினான். அவன் உறங்கும் சமயத்தில், அவனிடமிருந்த சுரங்கப்பாதை சாவியைத் திருடிய சகோதரிகள், அந்தப் பாதைவழியே தப்பி தங்கள் நாட்டுக்கு சென்றனர். அவர்களை கற்பிழந்தவர்கள் என சந்தேகித்த தந்தை, ராமதூதன் ஒருவன் வருவான். அவனால் மட்டுமே உங்களுக்கு விமோசனம் தர முடியும், என சொல்லி விரட்டிவிட்டார். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கினர். அனுமன் சீதையை தேடி சென்ற போது, ஒரு வீட்டில் புஸ்மலியைப் பார்த்தார். அவளது அழகால் கவரப்பட்ட அவர், தன் காதலை வெளிப்படுத்தினார். அவள் ஏற்க மறுத்தாள், தான் கண்ணியத்துக்குரிய ராமபிரானின் தூதர் என்பதையும், அவர் சீதாவுக்காக தன்னிடம் தந்திருந்த மோதிரத்தையும் அவளிடம் காட்டியதும், அவள் மகிழ்ந்தாள். ராமதூதனே தனக்கு விமோசனம் தர முடியும் என்பதை அறிந்த அவள் அவரைத் திருமணம் செய்து கொண்டாள். தன் தங்கையைத் தேடிப்பிடித்து அவளையும் திருமணம் செய்ய வேண்டினாள். அனுமன் அவளைக் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டார். அவளிடம் இருந்த சுரங்கச்சாவியைக் கொண்டே அனுமன் ராவணனின் கோட்டைக்குள் எளிதாக புகுந்தார்.