நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ராமபிரானை மனதில் நினைத்து இந்த பிரார்த்தனையை செய்தால் ராம சகோதரர்களைப்போல் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். நாராயணீயம் எழுதிய நாராயணபட்டத்திரி என்ற பிரார்த்தனையை எழுதியுள்ளார். இறைவா! தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா! ராமனாக அவதாரம் செய்த குருவாயூரப்பனாகிய தாங்கள் இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தையும், கவசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள். ராவணனோடு சண்டை செய்து அவனுடைய எல்லா தலைகளையும் பிரம்மாஸ்திரத்தால் வெட்டி தள்ளினீர்கள். தீயில் குளித்த தூயவளான சீதையை திரும்பவும் ஏற்றுக் கொண்டீர்கள். வானர கூட்டங்கள் காயம்படாமல் இருந்தன. இறந்த வானரங்களை தேவர்கள் கூட்டம் பிழைக்க வைத்தது. இலங்கையின் மன்னனான விபீஷணனுடனும், பிரிய மனைவியான சீதாதேவியுடனும், அன்புக்குரிய லட்சுமணனுடனும் புஷ்பக விமானத்தில் உங்கள் சொந்த நகரமான அயோத்திக்கு சென்றீர்கள்.(இந்த பிரார்த்தனையை சொன்னால் குழந்தை பேறு மட்டுமின்றி, பால் வளம் பெருகும் என்பதும் ஐதீகம்).