தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை: அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே...(வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே இவ்விஷயத்தில் சான்றாகும்.
ஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம்- இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா ?!