தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர். பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்ததுவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். வில்லை நன்கு பார் என்று முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள். அப்போது, ராமன் உரைக்கிறான்... வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.
அவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை! மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.