தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது?! பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே! பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே !
இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர். எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ - என்று போற்றுகிறார். எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.