சிங்கம்புணரி : பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.
சங்க இலக்கியத்தில் பாடப்பெற்றதும், பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதுமான இக்கோயில் சித்திரை திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப். 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடந்தது. காலை 10:00 மணிக்கு கோயில் முன்பாக உள்ள மண்டபத்தில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து விழா மண்டபத்தில் குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் நடந்தது. உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருக்கல்யாண நடத்தி வைக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை காண சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாளுடன் ருத்ரகோடீஸ்வரர் முதல் நாளே பிரான்மலைக் கோயிலில் எழுந்தருளியிருந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மொய் எழுதிச்சென்றனர். திருவிழாவின் 9-ம் திருநாளான ஏப்ரல் 15 ல் திருத்தேரோட்டம் நடக்கிறது.