பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
10:07
நாமக்கல்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோவிலில் நடந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். நாமக்கல் அடுத்த சின்னமுதலைப்பட்டியில், அம்மச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை, சிறப்பு பால் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மாவிளக்கு பூஜை விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, பால் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மாவிளக்கு பூஜை, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு மகா கணபதி, நவக்கிரகம் மற்றும் சுதர்ஷன ஹோமம், கஞ்சி கலயம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு, பெரியவீதி காவடி பழனியாண்டர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், தெற்குவீதி, முன்சீப் வீதி, மகா செல்வகணபதி கோவில், பகவதி அம்மன் கோவில், செல்லக்குமரன் கோவில் வீதி, குட்டைத்தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு, புஷ்பாஞ்சலி, மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம், சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, அம்மச்சி அம்மன் குடிபாட்டுக்காரர்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.