பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி: பாளை., திரிபுராந்தீஸ்வரர் கோயில், கொக்கிரகுளம் சிவன் கோயிலில் அம்பாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் கோலாகலமாக நடந்தது. பாளை., கோமதிஅம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு வளைகாப்பு உற்சவம் நேற்று நடந்தது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சகல விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பாளை., திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் திரளான பெண்கள் அம்பாளுக்கு வளைகளையும், பலகாரங்களையும், சீர்வரிசைகளையும் அர்ப்பணித்தனர். புதிய வஸ்திரம் சாத்துதல், பொட்டு கட்டுதல், வளையல்கள் அணிவித்தல், தீபாராதனை உள்ளிட்ட வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாளை., திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் மற்றும் சிவ பக்தர்கள் செய்திருந்தனர்.
கொக்கிரகுளம்: நெல்லை கொக்கிரகுளம் விசாலாட்சி அம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு விசாலாட்சி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சகலவிதமான திரவியங்களால் அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. விசாலாட்சி அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கணேசன், சுப்பிரமணிய பட்டர் செய்திருந்தனர்.