பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
04:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் தசாவதார சேவையில் பெருமாள் காட்சி அளித்தார்.
இக்கோயிலில் ஏப்., 11-இல் காப்பு கட்டுதலுடன் சித்திரைத் திருவிழா துவங்கி நடக்கிறது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வருகின்றனர். பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள், குதிரை வாகனத்தில் எழுந்தருளி வண்டியூரை அடைந்தார். நேற்று முன்தினம் இரவு சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, இரவு 12:00 மணிமுதல் தசாவதார சேவையில் அருள்பாலித்தார். அப்போது அழகர் அர்ச்சாவதாரம் (ஏகாந்த சேவை), மச்சம், கூர்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன் அவதாரம் எடுத்தார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரமெடுத்து வாணியர் மண்டகப்படி வலம் வந்தார். தொடர்ந்து மாலை கருட வாகனத்தில் புறப்பாடாகி மண்டகப்படி அடைந்தார். இன்று ராஜாங்க திருக்கோலத்திலும், நாளை(ஏப்., 20) மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் கோயிலுக்கு எழுந்தருள உள்ளார்.