பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
04:04
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவையொட்டி, அம்மன் காமதேனு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, 13 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. நாள்தோறும், அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்துவருகிறது. பகல், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, கோத்தகிரி வட்டார மகளிர் அமைப்பு சார்பில், அருள்மிகு மாரியம்மனுக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அபிஷேக அலங்கார வழிபாடும், அன்னதானமும் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கோவிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் காமதேனு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு, பேண்டு வாத்தியம் முழங்க, ஆடல் பாடலுடன், திருவீதி உலா கோவிலை அடைந்தது.