மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள ஆவுடைநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் மண்டல பூஜை மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.வருகிற 22ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் கிராமத்தில் ஆவுடைநாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்ததையடுத்து ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் 88 வருடங்களுக்கு பிறகு கடந்த பிப்.6ம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை மண்டலாபிஷேக பூர்த்தி விழாவும்,மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற்றது.இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து வருகிற 22-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.