பதிவு செய்த நாள்
21
ஏப்
2022
11:04
பெ.நா.பாளையம்: பாலமலைக்கு வரும் பக்தர்கள் வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வருதல் கூடாது என, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அடிவாரத்திலிருந்து மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. வனத்துறைக்கு சொந்தமான மலைப்பாதையில் தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் எடுத்துச் செல்லக்கூடாது என, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாலமலை அடிவாரத்தில் வனத்துறையினர் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலைப்பாதையில் மற்றும் வனத்துக்குள் நெகிழிப்பை, பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் துணி போன்ற எவ்விதமான கழிவுப் பொருட்களையும் செல்லக்கூடாது. மது பாட்டில்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. யானைகள், கரடிகள் போன்ற ஆபத்தான வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால், நடைபயணம் அனுமதிக்கப்படமாட்டாது. தனி, பொது போக்குவரத்தில் கவனமுடன் பயணிக்க வேண்டும். மலையடிவாரத்துக்கும், கோவிலுக்கும் இடையே சாலையோரத்தில் எந்த ஒரு இடத்திலும் வாகனத்தை நிறுத்த கூடாது. வனப்பகுதிக்குள் செல்லவோ, போட்டோ, வீடியோ எடுக்கவோ கூடாது என, வனத்துறையினர் அதில் குறிப்பிட்டுள்ளனர்.