பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
06:04
காஞ்சி மஹாபெரியவர் 1981ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தார். சென்னை வெங்கட்ராமன், தன் ஏழுமாத கர்ப்பிணி மனைவி கமலாவுடன் சுவாமிகளைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். ‘‘பெரியவா... ஏற்கனவே எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எட்டு ஆண்டுக்குப் பிறகு கர்ப்பமாக இருக்கிறாள். இந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும்’’ என்று வேண்டினார். ‘‘ஏன் இரண்டு பெண் என்றால் அதிகமா?’’ என்று சிரித்த பெரியவர், ‘‘ இது எத்தனையாவது மாதம்’’ எனக் கேட்டார். ‘ஏழு மாதம்’ என்று கமலா சொல்ல, ‘‘இப்போது சொன்னால் நான் என்ன செய்ய முடியும்’’ என்றார் மஹாபெரியவர். முக்காலமும் அறிந்த ஞானி இப்படி சொல்கிறாரே... இதுவும் பெண் குழந்தை தானோ என எண்ணிய கமலா அழத் தொடங்கினார். இதைக் கண்ட பெரியவர் மாம்பழம் ஒன்றை கொடுத்து, ‘‘ இதைச் சாப்பிட்டு விட்டு பாண்டுரங்கனைத் தரிசனம் செய்யுங்கள்’’ என அத்தம்பதிக்கு உத்தரவிட்டார்.
சுவாமி தரிசனம் முடித்து விட்டு வந்த அவர்களிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் ‘சந்திர மெளலி’ என பெயர் வைக்கலாமா?’ எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன், ‘‘பெரியவா உத்தரவுப்படியே பெயர் வைக்கிறோம்’’ என அத்தம்பதியர் விடைபெற்றனர். ஊருக்கு திரும்பியதும் வெங்கட்ராமன் பணிவிஷயமாக வெளியூர் சென்றார். திடீரென கமலாவுக்கு தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டது. அதைக் கண்டதும், ‘‘பெரியவா... என்ன தவறு செய்தோம். எங்களைச் சோதிக்காதீர்கள். கருவுற்ற சமயத்தில் இப்படி நடந்தால் நான் என்ன செய்வேன்’’ என அருகில் இருந்த கமலாவின் மாமியார் வருந்தினார். மருத்துவரிடம் சென்ற போது, ‘‘பயப்பட வேண்டாம். இனி வாந்தி நின்று விடும்’’ எனச் சொன்னார்.
அன்றிரவு மாமியாரின் கனவில் மஹாபெரியவர் ஆசியளித்தார். அதையறிந்த மகனும், மருமகள் கமலாவும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் ஒருநாள் குழந்தையுடன் காஞ்சி மடத்திற்குச் சென்றனர். அங்கு சுவாமிகளின் முன்னிலையில் குழந்தையை கிடத்திய போது, ‘‘என்ன சந்திரமெளலியா’’ என்று கேட்ட மஹாபெரியவர் வாழை, மா, அன்னாசிப்பழங்களை கொடுத்து ஆசியளித்தார். ‘‘இந்த பழங்களை அரைத்து கூழாக்கி கொஞ்சம் குழந்தைக்கு கொடு’’ என்றும் உத்தரவிட்டார். குழந்தையின் தலையில் சிறு பள்ளம் போல குறை இருந்தது. அதை மஹாபெரியவரிடம் காட்டிய போது, ‘‘பாண்டுரங்கனுக்கும் இப்படித் தான் தலையில் பள்ளம் இருக்கிறது. கவலை வேண்டாம். காலப்போக்கில் சரியாகி விடும்’’ என்றார். நாளடைவில் அதுவும் நடந்தது. தன்னை நம்பியவர்கள் விரும்பிய வரத்தை தரும் வள்ளல் மஹாபெரியவர் என்றால் மிகையில்லை.