பதிவு செய்த நாள்
25
ஏப்
2022
03:04
ஒரகடம் : வடக்குப்பட்டு கிராமத்தில், சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், இம்மாத இறுதி அல்லது மே துவக்கத்தில் அகழாய்வுசெய்ய உள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.குன்றத்துார் ஒன்றியம், ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சிக்குட்பட்ட புதர் மண்டிய பகுதியில் 7 அடி உயரத்தில் சிவலிங்கம்ஒன்றை, அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர்.வடக்குப்பட்டு ஊராட்சி தலைவர் நந்தினி மற்றும் சிவனடியார்கள் இணைந்து, சிவ லிங்கத்திற்கு பிரதிஷ்டை செய்து, தகரத்தால் ஆன சிறிய கோவில் ஒன்றை கட்டி, நந்தி சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.இந்த சிவன் கோவில் அருகே, மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. இவற்றில், பழங்கால தொல்பொருட்கள் பல கிடைத்துள்ளன. இப்பகுதியில் இம்மாதம் இறுதியில் அகழாய்வு செய்ய உள்ளதாக, மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்துள்ளனர்.மத்திய தொல்லியல் துறையினர் கூறியதாவது:ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட கட்டட அமைப்புகள் சிதிலமடைந்து, உயரமான மண் மேடுகளாக மாறும். இதை தொல்லியல் மேடு என்போம்.வடக்குப்பட்டில் மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று தொடக்க காலம் முதல் உள்ள வாழ்விடச் சான்றுகள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.அகழாய்வு செய்வதற்கு நிதி கிடைத்தவுடன், இம்மாதம் இறுதி அல்லது மே மாதம் துவக்கத்தில், இப்பகுதியில் அகழாய்வு துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.