பதிவு செய்த நாள்
26
ஏப்
2022
03:04
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்திற்கான பந்தக்கால், நேற்று காலை நடப்பட்டது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், அடுத்த மாதம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், நேற்று காலை 6:30 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.பத்து நாட்கள் விமரிசையாக நடக்கும், இந்த திருவிழாவில் முக்கிய உற்சவமான கருட சேவை 15ல் நடக்கவுள்ளது.அன்று அதிகாலை, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி செட்டித்தெரு, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு வழியாக சென்று, அங்குள்ள துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.பின், கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு, பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு வழியாக கச்சபேஸ்வரர் கோவில் எதிரில், பெருமாள் எழுந்தருள்வார். அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள், கருட சேவை உற்சவத்தை கண்டுகளிப்பர்.வரும் 19ல் தேர் திருவிழா நடக்கிறது. காந்தி சாலை, காமாரஜர் சாலை, நான்கு ராஜவீதிகள் வழியாக சென்று, அதே வழியாக தேர் நிலையை சென்றடையும். 21ல் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தின்போது, காலை, மாலை என இரு வேலைகளில், சுவாமி புறப்பாடு நடக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.