ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரின் வடம் படித்து இழுத்துச்சென்றனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர்.ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ராமானுஜரின் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா ஏப்., 26ம் தேதி துவங்கியது.தினமும் காலை, மாலை ஒரு வாகனத்தில் ராமானுஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜர் தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் துளிகள்= தேர் செல்லும் பாதையில், பக்தர்கள் பாதம் வெப்பத்தால் சுடாமல் இருக்க, தண்ணீர் விடப்பட்டது. சாலை முழுதும் பெண்கள் கோலமிட்டு தேருக்கு வரவேற்பு அளித்தனர்= ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்து, பக்தர்கள் பஜனை பாடி சென்றனர். ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடி, நடனமாடி தேர் திருவிழாவை கொண்டாடினர்= தேருக்கு முன் சென்ற ராமானுஜர் கோவில் யானை கோதையிடம், ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்று, செல்பி எடுத்தனர். ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் பாஸ் தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள் 80 பேர், பக்தர்கள் அன்ன தானம் சாப்பிட்டு வீசிய தட்டு, டம்ளர், குளிர்பான பாட்டில் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அகற்றினர்.