பானு என்றால் சூரியன் என்பது நாம் அறிந்ததே. சப்தமி திதியும் சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக வந்தால் அதை பானு சப்தமி எனச் சொல்வார்கள். பானு சப்தமி சூர்ய கிரகணத்திற்கு ஒப்பானது. அன்று பித்ரு தர்ப்பணம்செய்தால் மிகவும் நல்லது. சூர்ய கிரகணம் முடிந்த பின் செய்யும் தர்ப்பணத்திற்கு ஒப்பானது. நதி தீரத்தில் புனித நீராடுதல், தானம் செய்தல் ஆகியவை நன்மை பயக்கும். இன்று தானம் செய்தால் ஆயிர மடங்கு பலன் கிடைக்கும்.
வீட்டில் திறந்த வெளியில், சூரிய வெளிச்சம் தெரியும்படியான இடத்தில் கோதுமையால் செய்த இனிப்புகளை சூரிய பகவானுக்கு படைப்பது விசேஷம். இன்று விரதமிருந்தால் நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்ட தாய்தந்தையர், மனைவி அல்லது கணவன் நோயிலிருந்து விடுபடுவர் என்பது உறுதி. கண் சம்பந்தமான வியாதிகளும் நீங்கும் என்பது நிச்சயம். நல்ல பதவிகள் கிடைக்கும். இந்த நாளில் ஓம் சூர்யாய நம, பாஸ்கராய நம எனச் சொல்வது நல்லது
சூரியன் வழிபாடு என்றாலே ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் நினைவுக்கு வருவது நிச்சயம். இது அகஸ்தியரால் ராமன் ராவணனை வெல்லும் பொருட்டு போர்க்களத்தில் எழுதப்பட்டது. ராமர் மனம் துவண்டு விடாமல் வெற்றி இலக்கை எட்டுவதற்காக அவருக்கு சக்தி அளிக்க வேண்டி எழுதப்பட்ட ஸ்லோகம் இது. சூரிய கடவுள் வெற்றி வாய்ப்புகளை அள்ளித் தருபவர்.