1. அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்பித்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும் அன்றைய தினம் வேதபாராயணம், ஜெபம் தியானம் செய்தால் இறையருள் சட்டென்று கிட்டும். புண்ணிய நதிகளில் நீராடி கோயில் தரிசனம் செய்தால் மிகுந்த பலன் கிட்டும். 2. அட்சய திருதியை அன்று கர்நாடக பெண்கள், ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து கவுரி அம்மனை அதில் எழுந்தருளச் செய்து, சுவர்ண கவுரி விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டிற்கு வருவதாகவும், விநாயகர் அதற்கு மறுநாள் வருவதாகவும் நம்புகிறார்கள். 3. கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று 12 கருட சேவை உற்சவம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் இந்த 12 பெருமாள்களையும் வழிபட்டால் குறையாத வளங்கள் வாழ்வில் பெருகும் என்கிறார்கள். 4. அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும் என்கிறார்கள். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முக்கூடல் எனப் படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று இங்கு நீராட ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். 5. அட்சய திருதியை நன்னாளில்தான் பிரம்ம தேவர் உலகத்தை படைத்தார் என்கின்றன புராண கதைகள்.