குஜராத்திலுள்ள போர்பந்தரில் தான் சுதாமர் எனப்படும் குசேலர் கோயில் உள்ளது. அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். ஆனால் அவரது கோயில் வளமையாக பிங்க் வண்ண சலவைக் கல்லில் தோற்றமளிக்கிறது. 1902ல் எழுப்பப்பட்ட இக்கோயில் நிழல் தரும் மரங்களுக்கு நடுவே உள்ளது. நட்புக்கு ஓர் அடையாளமாகத் திகழ்கிறது இக்கோயில். பிரம்மாண்டமான மண்டபம் நுழைவாயிலில் தென்படுகிறது. இதில் அழகிய வேலைப்பாடுகள் தென்படுகின்றன. சலவைக் கற்களால் செய்யப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். அழகிய வளைவுகள் தென்படுகின்றன. சுற்றிலும் ஒரு அழகிய நந்தவனம். அங்கே விநாயகருக்கு என்று ஒரு சிறிய கோயில் காணப்படுகிறது. ராம் தேவ்ஜி ஜேத்வா என்பவரின் சிலை ஒன்றும் காணப்படுகிறது. அந்த மன்னரின் ஆட்சியில் தான் சுதாமா கோயில் எழுப்பப்பட்டது. நிறைய நாடகங்கள் நடத்தப்பட்டு அவற்றுக்கு அதிகக் கட்டணம் வைக்கப்பட்டு போர்பந்தரில் உள்ள வணிகர்கள் அவற்றை வாங்கி, அந்தக் தொகையின் மூலம்தான் இந்த கோயில் எழுப்பப்பட்டது. குசேலரின் எளிய வீடு ஒரு காலத்தில் இந்த இடத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. கண்ணனுக்கு அளித்த உணவை நினைவுபடுத்தும் வகையில் இங்கு பிரசாதமாக அவல் தரப்படுகிறது.