பதிவு செய்த நாள்
10
மே
2022
04:05
பழநி: பழநி மலைக் கோயில் நிர்வாகம், ஹிந்து அறநிலை துறை இணைந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பெரிய குமாரபாளையம் கிராமத்தில் 60 ஏக்கர் நிலத்தை மீட்டது.
பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பெரிய குமாரபாளையதைச் சேர்ந்த ஆறு நபர்கள் தங்களுக்கானது என உரிமை கோரி தாராபுரம் சார்பு நீதிமன்றம், கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு கொடுத்திருந்தனர். இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம், 40 ஆண்டுகளாக வழக்கை நடத்தியது. இந்நிலையில் கிராம புல எண்கள் 400, 401, 404/2, 412/2, 413/2 ஆகியவற்றில் உள்ள 60 ஏக்கர் 43 சென்ட் புஞ்சை நிலங்கள் பழநி கோயிலுக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் திண்டுக்கல் ஹிந்து அறநிலை துறை இணை ஆணையர் உத்தரவுப்படி வருவாய்த் துறையினர், காவல் துறையினர், ஹிந்து அறநிலைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் தற்போது ரூ. 25 கோடி மதிப்புடைய நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, பழநி சரக ஆய்வாளர் கண்ணன் ஆகியோர், பழநி கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் ஒப்படைத்தனர். இதில் பழநி கோயில் துணை ஆணையர் பிரகாஷ் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.