பதிவு செய்த நாள்
10
மே
2022
04:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக கருதப்படும், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும், 12ம் தேதி துவங்குகிறது. 12, 13ம் தேதிகளில் பெரிய தேர், 14ம் தேதி சின்ன தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வழியாக, திருப்பூர் வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள், ஆட்டையம்பாளையம் வந்து, அங்கிருந்து, கோவை சாலை வழியாக, கணினி ரவுண்டானா சென்று, அங்கிருந்து, சேலம் பை பாஸ் அல்லது சர்வீஸ் ரோடு வழியாக, திருப்பூர் சாலை, கிருஷ்ணா பேக்கரி சந்திப்பு வந்து, அங்கிருந்து திருப்பூர் செல்ல வேண்டும்.
* கோவையில் இருந்து ஈரோடு, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் எம்.நாதம்பாளையம் கணினி ரவுண்டானா வழியாக சேலம் பைபாஸ் மார்க்கமாக, கிருஷ்ணா பேக்கரி சந்திப்பு சாலை வழியாக, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கவிட்டு, மீண்டும் கிருஷ்ணா பேக்கரி சந்திப்பு சாலை வழியாக, பைபாஸ் சாலையில், ஈரோடு, சேலம் செல்ல வேண்டும். அதே போன்று, ஈரோடு, சேலம்உள்ளிட்ட இடங்களில் இருந்து அவிநாசி மார்க்கமாக கோவை, திருப்பூர் வரும் வாகனங்களும் அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் சாலையை தவிர்த்து, இதே வழித்தடத்தில் பயணிக்க வேண்டும்.
* கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்களும், எம்.நாதம்பாளைம் கணினி ரவுண்டானா வழியாக, சேலம் பை பாஸ் வழியாக, திருப்பூர் சென்றடைய வேண்டும். திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பஸ்கள், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து பயணிகளை ஏற்றி. இறக்கவிட்டு, மீண்டும் கிருஷ்ணா பேக்கரி வழியாக, எம்.நாதம்பாளையம் கணினி ரவுண்டானா வழியாக, கோவை செல்ல வேண்டும்.
* சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அவிநாசி புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், சேவூர் மார்க்கமாக நம்பியூர், புளியம்பட்டி, சத்தி, மதுரை, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து, ஈரோடு சாலையில், அவிநாசி அரசுகலைக் கல்லூரியை ஒட்டியுள்ள ராயம்பாளையம் சாலையில் சென்று, மடத்துப்பாளையம் சாலை, பண்ணாரியம்மன் கோவில் வழியாக, சேவூர் செல்ல வேண்டும்.
* புளியம்பட்டி, நம்பியூர், சேவூர் வழியாக அவிநாசி, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள், அவிநாசி முத்துச்செட்டிபாளையம் பிரிவு சாலை, ஆர்.சி., பள்ளி சாலை வழியாக, அவிநாசி கால்நடை மருத்துவமனையை ஒட்டிய சாலையை அடைந்து, ஆட்டையாம்பாளையம் வழியாக, எம்.நாதம்பாளையம், கணினி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். இதன் மூலம், அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், சேவூர் ரோட்டில் பண்ணாரியம்மன் கோவில் வரையுள்ள சுற்றளவுக்கு போக்குவரத்து இல்லாத பகுதியாக மாற்றப்பட்டு, முழுக்க, முழுக்க தேர்த்திருவிழா பயன்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.