வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கிராமத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று முன்தினம் ஆடிப்பூர விழா நடந்தது. இதில் கலச வேள்வி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணியளவில் சக்தி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்றுக்காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கஞ்சிக்காவடி எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு ஆடி சீர்வரிசை எடுத்து வந்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.