பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
திருப்போரூர்: நெல்லிக்குப்பம், வேண்டவராசியம்மன் கோவில் ஆடிப்பெருவிழா கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த நெல்லிகுப்பத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம், இரண்டாவது வாரம் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. கோவிலின், 53வது ஆண்டு, ஆடிப் பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள், பால்குடம் எடுத்தனர். காலை 11 மணிக்கு உற்சவருக்கு, பால் அபிஷேகமும், மகா அபிஷேகமும் நடந்தது.மூலவர் வேண்டவராசி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு, ஊஞ்சல் சேவையும், கூட்டு வழிபாடும் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். பின், மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, அன்னை வேண்டவராசி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.