பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
காங்கேயம்: காங்கேயம் அருகே பால்வெண்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம் செய்து எட்டு மாதத்துக்கு மேலாகியும், திருப்பணி துவங்கவில்லை. காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிஸ்வாமி கோவில், நிர்வாகத்தின் கீழ் பட்டாலி கிராமத்தில் பால்வெண்ணேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில், 85 சென்ட் இடத்தில், பால்வெண்ணேஸ்வரர், அம்மன், தட்ஷணாமூர்த்தி, ஆறுமுருகத்துடன் முருகன் சன்னதிகள் உள்ளன. முன்பு கோவிலில் வெண்கல தேர் ஓடியது. அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலம். அவருக்கு நேரடியாக முருகன் ஆறுமுகத்துடன் காட்சியளித்துள்ளார். பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சொந்தமாக, 185 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. தற்போதை நிலம் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, கோவிலுக்கு வரவேண்டிய வருவாய் முற்றிலும் நின்று போனது. தற்போது வருவாய் துறை கணக்குபடி, 77.5 ஏக்கர் நிலத்துக்கே ஆதாரம் உள்ளது. 85 சென்ட் இடத்தில் பிரம்மாண்டமாக இருந்த கோவில் வளாகமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோவில் பராமரிப்பின்றி, மிகவும் சிதிலமடைந்து, கீழே விழும் அபாயத்தில் உள்ளது. பூஜைக்கு செல்லும் அர்ச்சகர்கள் கூட மூலஸ்தானத்தில் விளக்கேற்ற கூட பீதியில் சென்று வருகின்றனர்.எட்டு மாதங்களுக்கு முன் கோவிலில் திருப்பணி செய்யப்பட்டது. அனைத்து சன்னதிகள் முன்பும் ஒரு ஷெட் அமைத்து ஸ்வாமிகள் அங்கு வைக்கப்பட்டது. அறநிலையத்துறை ஸ்தபதி வரவழைக்கப்பட்டு, ஆகம விதிப்படி, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வதுடன், வருவாய்துறையினர் மூலம் கோவில், 85 சென்ட் நிலம் அளந்து கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பாலாலயம் செய்தபோது வந்த அதிகாரிகள் அதன் பின் கோவில் பக்கமே வரவில்லை. பராமரிக்கப்படாத கோவிலில் சன்னதிகளின் சுவர்கள் ஒவ்வொன்றாக இடிந்து விழுகின்றன. காங்கேயம் பகுதியில் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வழங்க பலர் தயாராக இருந்தும், அதிகாரிகள் திருப்பணி துவங்காமல், கிடப்பில் போட்டுள்ளதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். விரைவில் திருப்பணி துவங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.