பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு நடந்த தங்க கவச அலங்கார விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ப.வேலூர் ஆஞ்சநேயர் அபிஷேக விழாக்குழு சார்பில், ஆண்டு தோறும், நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக விழா, புஷ்பாஞ்சலி செய்வது வழக்கம். இந்த ஆண்டு, 28ம் ஆண்டு விழா மற்றும் தங்க கவச அலங்கார விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை 8.30 மணிக்கு, வடைமாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து, 9 மணிக்கு பக்தி சொற்பொழிவும், 11 மணிக்கு மகா அபிஷேகம், 308 லிட்டர் பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலியும் நடந்தது. பகல் 3 மணிக்கு, ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது, மகா தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். இரவு 7 மணிக்கு, ஆஞ்சநேயர் ஸ்வாமி தங்கரதத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நரசிம்ம மூர்த்தி, நாமகிரி தாயார் ஆகிய மூர்த்திகளுக்கு திருமஞ்சனமும், அலங்காரமும் கோலாகலமாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, ஆஞ்சநேயர் அபிஷேக விழாக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.