பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
11:07
திருவெண்ணெய்நல்லூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவெண்ணெய்நல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக முன்கூட்டியே பணியை துவக்கியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும், முதல் பண்டிகையாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களில் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகள் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து படையல் செய்து வழிபடுவர். அத்துடன் ஒவ்வொரு பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தி, ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதற்காக விநாயகர் சிலைகள் ஒவ்வொரு பகுதியிலும் கைத் தேர்ந்த கலைஞர்களால் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலை நீர்நிலைகளில் கரைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் களிமண், பீங்கான்மாவு, மரவள்ளி மாவு, மைதா ஆகியவைகளை கொண்டு ரசாயன கலவையில்லாமல் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான டி.எடையார், சித்திலிங்கமடம், அரசூர், மடப்பட்டு மற்றும் கடலூர் மாவட்டம் வீரப்பார் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாராகும் சிலைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கிறது. இந்த ஆண்டு வரும் செப்டம்டர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் முன்கூட்டியே சிலை செய்யும் பணி துவங்கியுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் இரவு, பகலாக சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று அடி உயரம் முதல் 15 அடி உயரம் வரையிலான சிலைகள் செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாயில் இருந்து 7, 500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஆர்டரின் பேரில் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் உடல், கழுத்து, தும்பிக்கை மற்றும் கைகள் என தனித்தனியாக அச்சுகள் மூலம் செய்து அவைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகிறது. பெரிய அளவிலான சிலைகள் அந்தந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த இடத்திலேயே இணைத்து வண்ணம் தீட்டிகொடுக்கின்றனர். ஆண்டுக்காண்டு விநயாகர் சிலை ஆர்டர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளதால் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி, டி.எடையார் தட்சணாமூர்த்தி கூறுகையில், 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் விநாயகர் சிலை செய்து வருகிறேன். மழையின்போது சிலைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வங்கி கடனுதவி அளித்தால் ஷெட் அமைத்து பாதுகாப்பாக சிலை தயாரிப்பில் ஈடுபட முடியும் என்றார்.