பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
11:07
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா துவங்கியது.விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 8 மணிக்கு பால் அன்னதர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 2 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, இரவு 8 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்பட்டது. தினமும் 7 மணியளவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 11ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. 8 மணிக்கு பால் அன்னதர்மம் வழங்கப்பட்டது. 10 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி நடந்தது. தொடர்ந்து உச்சிப்படிப்பு, பணிவிடை நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அய்யா வைகுண்டரின் தேரோட்டம் நடந்தது. 3.20 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதர்மம், மாலை உகப்படிப்பு, பணிவிடை, இரவு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 1 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி வருதல், 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்பட்டது. தேரோட்ட விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை செயலாளர் வள்ளியூர், தர்மர், பொருளாளர் ராமையா, அய்யாவின் அருள் இசை புலவர் சிவச்சந்திரன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாக குழு உறுப்பினர்கள் தோப்புமணி உட்பட ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.