பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் உள்ள தாமிரபரணி தேவி ரத உற்சவ ஆடிப் பெருக்கு தீர்த்தவாரி விழா 100 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் வரும் 2ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தாமிரபரணி அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிமணிய ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லையப்பர் கோயிலில் 63 நாயன்மார்களுடன் தாமிபரணி தேவி சிலையும் உள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாமிபரணி தேவி தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளி ஆடிப் பெருக்கு தீர்த்த வாரி விழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அதன் பிறகு இந்த விழா நடக்கவில்லை. தற்போது தாமிபரணி அமைப்பின் மூலம் இப்பிரச்னை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதின் பேரில் இந்த ஆண்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2ம் தேதி மாலை 3 மணிக்கு தாமிபரணி அன்னை சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இருந்து ரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நடக்கிறது. இதனை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி துவக்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு நெல்லை ஜங்ஷன் கைலாச நாதர் கோயில் எதிரே உள்ள தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் கருணா சாகர் துவக்கி வைக்கிறார். இதில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இவ்விழாவில் உழவார பணியினர், பக்தர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஆடிப் பெருக்கு அன்று தாமிபரணி தேவியை வணங்கி தாமிர பாத்திரத்தில் மஞ்சள் நீர் கரைசல் எடுத்து வந்து அதனை தாமிபரணி ஆற்றில் கரைத்து கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலி பெண்கள் வழிபாடு செய்தால் கணவருக்கு நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம், தம்பதிகள் ஒற்றுமை உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கல்வி மேன்மை, குபேர அருளால் பெருஞ்செல்வம், பருவம் தோறும் தவறாது பெருமழை ஆகிய நற்பலன்களும் உண்டாகும். தீர்த்தவாரி மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 27 நட்சத்திர சிற்பங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. பெயின்ட் பூசப்பட்டு சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிந்துபூந்துரை தீர்த்த கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்கிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மாநில கோட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாநில பொது செயலாளர் தயானந்த துரை, மாநில செயற்குழு உறுப்பினர் வினோத் சுப்பையா, மேலப்பாளையம் மண்டல தலைவர் சின்னதுரை, தொல்லியல் துறை ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.