ராமேஸ்வரம் கோயிலில் கோடி தீர்த்தம் தட்டுப்பாடு : ஹிந்து முன்னணி புகார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2022 02:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கோடி தீர்த்தம் தட்டுப்பாடு உள்ள நிலையில், ஆன்லைனில் விற்பனை செய்யும் மோசடி கும்பல் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி, ஹிந்து அறநிலைதுறை ஆணையருக்கு அனுப்பிய மனுவில் : தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்தங்களில், கோடி தீர்த்தம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய மகிமை கிடைக்கும். இதனால் கோயில் வளாகத்தில் கோடி தீர்த்தத்தை அரை லிட்டர் பாட்டிலில் ரூ.20க்கு கோயில் நிர்வாகம் விற்கிறது. இச்சூழலில் கடந்த சில மாதமாக கோடி தீர்த்தம் விற்பதில் கோயில் நிர்வாகம் செய்த குளறுபடியால் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆனால் தனியார் நிறுவனம் ஆன்லைனில் கோடி தீர்த்தம், பிரசாதம் என ரூ.499க்கு தடையின்றி விற்கிறது. கோடி தீர்த்தம் தனியாருக்கு விற்க கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் பக்தர்களிடம் மோசடியாக தீர்த்தம் விற்கும் நிறுவனம் மீது கோயில் நிர்வாகம் ஏன் புகார் அளிக்கவில்லை. தனியார் நிறுவனத்துடன் கோயில் நிர்வாகம் உடந்தை உள்ளதா என சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து விசாரித்து தீர்த்தத்தின் புனிதம் காக்க மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.