பதிவு செய்த நாள்
02
ஆக
2012
10:08
செல்வவளம் தா ஸ்ரீரங்கநாதா!
ஆடிப்பெருக்கு நன்னாளான இன்று, காவிரிக்கரையோரம் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரை வணங்கும் விதத்தில் ரங்கநாத ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.
* காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளே! தாமரை மொட்டுப் போல இருக்கும் விமானத்தின் கீழ் வீற்றிருப்பவரே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் யோக நித்திரை செய்பவரே! ஸ்ரீதேவியும், பூதேவியும் வருடும் திருப்பாதங்களைக் கொண்டவரே! ஸ்ரீரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.
* கஸ்தூரி திலகத்தை நெற்றியில் அணிந்தவரே! காதுவரை நீண்டிருக்கும் கண்களைக் கொண்டவரே! முத்துக்களால் இழைத்த பொன் கிரீடத்தில் பிரகாசிப்பவரே! பக்தர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரே! தாமரை போன்ற திருமுகம் பெற்றவரே! ஸ்ரீரங்கநாதரே! உம்மைச் சரணடைகிறேன்.
* மது என்னும் அரக்கனை அழித்தவரே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், இனிமை மிக்க நீர் நிரம்பியதும், கிளி, குருவி போன்ற பறவைகள் இன்னிசை எழுப்புவதுமான காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கநாத பட்டணத்தை அடையும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்கும்!
* ரங்கநாதரே! ஹே நாராயண மூர்த்தியே! ஹரே கிருஷ்ணா! ஹரே கோவிந்தா! உமது திருநாமங்களை சொல்லும் எனக்கு பெருகி வரும் காவிரி போல் செல்வவளம் தருவாயாக!
* ரங்கநாதா! அடர்ந்த தோப்புகள் நிறைந்ததும், ரமணீயமானதும், அன்பர்களின் சிரமத்தைப் போக்குவதுமான காவிரிநதிக்கரையோரம் வசிக்கும் பாக்கியத்தை நிரந்தரமாகத் தர வேண்டும். செந்தாமரைக் கண்ணனே! உம்மைச் சேவிக்கும் பாக்கியம் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
* வேதகோஷம் நிறைந்ததும், மோட்சத்தை தருவதுமான திவ்யதேசமான ஸ்ரீரங்கம் என் கண்களில் எப்போதும் தெரிய வேண்டும். தேவலோக நந்தவனத்தில் அமர்ந்து அமிர்தம் குடிப்பதை காட்டிலும், ஸ்ரீரங்கத்தில் திரியும் நாயாக நான் திரிந்தாலும் போதும். லட்சுமியின் விலாசமான ஸ்ரீரங்கமே எனக்கு எப்போதும் புகலிடமாக அமைய வேண்டும்.
* "பசி எனக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது என்று குழந்தை கூறினால் கருணை கொண்ட தாய் ஓடிவந்து, எப்படி உடனே ஆகாரம் அளித்து அன்பு காட்டுவாளோ, அதுபோல காவிரிக்கரையோரம் கண்வளரும் ரங்கநாதரே! தாமதிக்காமல் விரைந்து வந்து அருள்புரிய வேண்டும்.