ஷீரடி : அடையாளம் தெரியாத பக்தரொருவர், ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பிரசித்திப் பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம், பக்தர்கள் அளித்த காணிக்கைகள் எண்ணப்பட்டு, நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, அடையாளம் தெரியாத பக்தரொருவர் பணப்பெட்டியினுள் ரகசிய இடத்தில் வைத்திருந்த வைரங்கள் பதித்த நகையும் இருந்தது. அதை மதிப்பீடு செய்ததில், அந்த நகையில் இருந்த இரு வைரங்களில் ஒன்று மூன்று காரட்டும், மற்றொன்று இரண்டு காரட்டும் கொண்டதாகவும், அவற்றின் மதிப்பு 1.18 கோடி ரூபாய் என்பதும் தெரிந்தது. அவ்விரு வைரங்களும் தங்கத்தினாலான பதக்கத்தில் பதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு இவ்வாறு அதிக மதிப்புள்ள வைரங்கள் காணிக்கையாகக் கிடைப்பது இதுவே முதல் முறை என, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.